Some words from Author:
“ஒரு சிறந்த புத்தகமும் அவற்றை அமர்ந்து படிக்கும் அளவிற்கான ஒரு இருப்பிடமும் மட்டுமே என் உலகை பூர்த்திசெய்துவிடும் என்று ஆழமாக நம்புகின்றேன்”
“புத்தகங்கள் இல்லாத வீட்டை உயிரில்லாத உடலுக்குச் சமமாகவே நான் கருதுகின்றேன்”
இங்கு பலரும் பல பொருட்களின்மீதும் உயிரினங்களின்மீதும் காதல் கொண்டிருக்கலாம்.அந்த நேசமும் காதலும் அவர்களுக்கேற்ப விசித்திரமானதாகவும் அமைந்திருக்கலாம்.ஆனால் ஒரு எழுத்தாளனாக என் வாழ்வில் அதிகம் நேசித்தது புத்தகங்களை மட்டுமே என்பதை இங்கு பெருமிதத்தோடு பதிவுசெய்ய விரும்புகின்றேன்.
என்னுடைய சிறுபிராயத்தில் என் பாட்டி புத்தகங்களைக்கண்டால் வாரி அனைத்து முத்தமிட்டு கண்ணில் வைத்துக் கொள்வதைப் பார்த்து நான் சிரித்ததுண்டு.ஆனால் இன்று ஏனோ நானும் புத்தகங்களைக் கண்டால் அவற்றை நுகர்ந்து முத்தமிட்டு கண்ணில் வைத்துக்கொள்கின்றேன்.ஏனென்றால் இந்த மனித சமூகத்தை இன்று வரை மனிதர்களாக நிலைநிறுத்திக்கொண்டிருப்பதற்கு அடிப்படை காரணியாக அமைந்திருக்கும் புத்தகங்களின் மட்டில்லா மதிப்பை உணர்ந்ததின் வெளிப்பாடு என்றே கருதுகின்றேன்.
ஏனோ தெரியவில்லை புத்தகங்களைக்கண்டால் என் மனதிற்குள் பொங்கும் பூரிப்பை வேறு எந்த பொருட்ளிலும் என்னால் பெற்றுக்கொள்ளமுடியவில்லை.உண்மையில் எனக்குத்தெரிந்து நான் மனிதர்களோடு செலவிட்ட நேரங்களைக் காட்டிலும் புத்தகங்களோடும் அதனை தொகுக்கும் பேனாக்களோடும் செலவிட்ட நேரங்களே அதிகம் என்று என்னால் உறுதியாக கூற முடியும்.அவ்வளவு ஏன் என் பொருளாதாரத்தில் பெரும் பகுதியை புத்தகங்கள் வாங்குவதற்கும்,அதனை அச்சிட்டு வழங்குவதற்குமே அதிகம் பயன்படுத்தியிருக்கிறேன் என்பதை நினைக்கும் பொழுது மனதிற்குள் ஒரு மட்டில்லா மகிழ்சியை என்னால் இப்பொழுதும் உணரமுடிகிறது.
உண்மையில் என் அறிவையும், சிந்தனை திறனையும், சிந்திக்கும் முறையையும்,அனைத்தையும் நடுநிலையோடு சீர்தூக்கிப்பார்க்கும் வல்லமையையும்,என் தவறுகளை சுதந்திரமாக எவ்வித கட்டுப்பாடுமின்றி,அதிகார துஷ்பிரயோகமுமின்றி திருத்திக்கொள்ளச் செய்யும் அக்கரையையும் கொடுப்பதில் எனக்கு உண்மை காதலியாக இருப்பது புத்தகங்கள் மட்டுமே என்பதை நான் என் வாழ்நாட்களில் கற்ற மாபெரும் பாடமாக கருதுகிறேன்.
நம்மில் பலரும் பேனாவால் செய்யப்பட்ட புரட்சி என்று “பேனாவை” மட்டுமே புகழ்பவர்கள் உண்டு.ஆனால் என்னால் அப்படி பேனாவை மட்டுமே புகழ்ந்துவிட்டு கடந்துவிடமுடியாது.ஏனெனில் பேனா செய்யும் தியாகத்தையும், புரட்சியையும் மொத்த உறுவமாக தாங்கி நிற்கும் ஆணிவேர்களே புத்தகங்கள்தான் என்பதை பல்வேறு சமயங்களில் நாம் மறந்துவிடுகின்றோம்.ஏனெனில் புரட்சியாலும் எழுச்சியாலும் வழிநடத்த நினைத்த அனைத்து போராளிகளும் ஏந்திய ஒரே ஆயுதம் புத்தகங்களே என்பதையே என்னால் வரலாற்றில் பெற்றுக்கொள்ள முடிகிறது.
எனவே!என் அன்பிற்கினிய நண்பர்களே.!
உங்கள் வாழ்விலும் “புத்தகங்களை உங்களிடமிருந்து பிறிக்க முடியாத ஒரு அங்கமாக ஆக்கிக்கொள்ளுங்கள்.பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இலக்கியங்களையும், காப்பியங்களையும்,வரலாற்றுச்சுவடுகளையும்,அனுபவங்களையும்,சுமந்துவந்திருக்கும் புத்தகங்கள் எதுவாக இருக்கட்டும் அவற்றில் எவற்றையும் அலட்சியம் செய்துவிடாதீர்கள்.
“புத்தகங்கள் என்பதே புனிதம் தான்” என்ற ஒற்றை எண்ணம் போதும் உங்களால் படிக்க முடியாத புத்தகங்களே கிடையாது என்பதை மட்டும் உங்கள் ஆழ்மனதில் பதியச் செய்துகொள்ளுங்கள் என்று பேரன்புடன் வேண்டிக்கொள்கின்றேன்.
ஆசிரியர்:அ.சதாம் உசேன் ஹஸனி